Wednesday, 18 September 2024

 

பாட்டியாலா செயற்குழு கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை : 

தற்போதைய தமிழ்நாடு மாநில சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 17,173.

1) பென்ஷன் குறித்து.. 

01/01/2017க்குப் பிறகு  பணி ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது அகில இந்திய சங்கத்தின் தலையாய கோரிக்கை. கடைசியாக நடந்த அகமதாபாத் செயற்குழு நடக்கும்போதுதான் டெல்லி முதன்மை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்திருந்த காரணத்தால், நமது கோரிக்கையை  வென்றெடுப்போம் என்ற  நம்பிக்கை இருந்தது. நமது சங்கத் தலைவர்களும் நமது துறை அமைச்சர் மற்றும் தொலைத் தொடர்பு துறை  செயலர் ஆகியோரை சந்தித்து மேல் முறையீடு  செய்யாமல் தீர்ப்பை அமலாக்குமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொலைத்தொடர்புத் துறை மேல்முறையீடு செய்துவிட்டது. உயர்நீதி மன்ற நிகழ்வுகள் தொடர்கிறது. தொலைத் தொடர்பு துறை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினாலும் நாம் தொடர்ந்து வாதாடி நமது கோரிக்கையை வெல்ல முயற்சிப்போம். அதே சமயம்,  நமது பெரும்பாலான உறுப்பினர்கள் 70 வயதைத் தாண்டியவர்கள். ஆகவே, அதையும் கணக்கில் கொண்டு நீதிமன்றம் மூலமாக போராடுகின்ற அதே வேளையில் ஒத்த கருத்துடைய சங்களோடு சேர்ந்து, நாம் முன்னிலை  எடுத்து,தொலைத் தொடர்பு துறையுடன் பேச்சு வார்த்தையும் நடத்தியும், தேவைப்பட்டால் . அமைப்பு நிலை போராட்டம் நடத்தலாம். நமது நோக்கம், விரைவில் பென்ஷன்  ரிவிஷன் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும். 

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நமது வழக்கறிஞர்கள் தமது வாதத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும். நமது செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை உள்ளதாக அமைய வேண்டும்.

2) வழக்கு நிதி :

 அகமதாபாத் செயற்குழு முடிவின்படி வழக்கு நிதி பல மாநிலங்களிலிருந்து  1.15 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு உறுப்பினர்கள் ரூபாய் 19,36,480 வழங்கியுள்ளனர். அதன் பிறகு பெறப்பட்ட தொகை ரூ.56,425 அனுப்பி வைக்கப்படும்.

ஆகமொத்தம் ரூ.19.93 லட்சம் தமிழ்நாடு உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மாநில சங்கத்தின் மூலமாக இல்லாமல் நேரடியாக மத்திய சங்கத்திற்கு நிதி வழங்கிட அறைகூவல் விடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சரியானதாகப்படவில்லை. ஆகவே இதுவே இறுதியாக இருக்க வேண்டும். 

3) சென்னை சொஸைட்டி பிரச்சனை.

இது  மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகை BSNL நிர்வாகத்தால் சொஸைட்டிக்கு கட்டப்பட்ட போதிலும், நவம்பர் 2018ல் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்களுக்குரிய தொகை, சென்னை சொஸைட்டி நிர்வாகத்தால் வழங்கப்படாமல் 6 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு மாநில சங்கத்தைச் சார்ந்த  2000க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு, ரூபாய் 50,000 முதல் 5 லட்சம் வரை வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது, சென்னை சொசைட்டி செயலிழந்துவிட்டது. ஆகவே, மத்திய பதிவாளர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இரண்டு முறை நமது மாநில சங்கம் அவருக்கு கடிதம் எழுதி உள்ளது. நடுவராக நியமிக்கப்பட்ட Ombudsmanக்கும் விளக்கமான கடிதம் எழுதப்பட்டது. நமது அகில இந்திய சங்கமும் மத்திய பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுவரை பதில் ஏதும் இல்லை. ஆகவே, உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அதற்காக நமது மத்திய சங்கம் முயற்சிக்க வேண்டும். 

4) CGHS : 

1) மதுரையைச் சுற்றி 6 வருவாய் மாவட்டங்கள்  உள்ளன. B1 நகரமான மதுரையில் CGHS Wellness centre அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னை கூடுதல் இயக்குனர் பரிந்துரை செய்திருந்தார். மேல் நடவடிக்கை ஏதும் இல்லை. நமது தலைமை சங்கம் மதுரையில் Wellness centre துவங்கிட மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் இயக்குனர் CGHS அவர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

 2) Wellness centre மற்றும் Empanelled Hospital இல்லாத பகுதிகளில் வசிக்கும் பல ஓய்வூதியர்கள் CGHS கார்டு பெற்றுள்ளனர். அவர்களின் நலன் கருதி ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் ஒரு Wellness centre துவங்க வேண்டும். அதற்காக நமது சங்கத் தலைமை முயற்சிக்க வேண்டும். 

3)  Wellness centre இல்லாத நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை அங்கீகரிக்க சுகாதாரத் துறை அனுமதி வழங்குவதில்லை. இந்த விதியையும் மாற்ற வேண்டும்.

தற்போது, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு  மருத்துவமனையை அங்கீகரிக்க மத்திய அரசின் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இதனை அமலாக்க வேண்டும். 

4) ஓய்வூதியர்கள் பலர் வெளிப்புற சிகிச்சைக்காக FMA   ரூ.1,000/- மும்,  உட்புற சிகிச்சைக்காக  CGHS Cardம் பெற்றுள்ளனர். அவர்கள் உட்புற சிகிச்சை பெற சென்னை கூடுதல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற வேண்டி உள்ளது. அவர்கள் வாழும் ஊரில் உள்ள வெல்னஸ் சென்டரில் இருந்து அனுமதி பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 

5)  BSNL MRS திட்டம் :

இதில் உள்ளவர்கள் உட்புற சிகிச்சை பெற வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் சில  மாவட்டங்களில் புதுப்பிக்கப்படுவது இல்லை. மற்ற மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், பணம் கட்டாமல் சிகிச்சை பெற வாய்ப்பு இல்லை. ஆகவே,

 இப் ரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். BSNL  நிர்வாகத்திடம் இருந்து சரியான வழிகாட்டுதல் பெற வேண்டும். 

6) மருத்துவப் படிகள் வழங்கும் பணிகள் அனைத்தும் டெல்லி  கார்ப்பரேட் அலுவலகத்தால் கையாளப்படுகிறது.

மெடிக்கல் அலவன்ஸ் ரூ.12,000/- வழங்கும்போது வருமான வரி கட்ட தேவையில்லாதவர்களிடமிருந்தும் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.  இது முறைப்படுத்தப்பட வேண்டும். 

7) வாழ்நாள் சான்றிதழ்.

தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்ட சங்கங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஓரிரு மாவட்டங்களில் வெளியே வர இயலாத ஓய்வூதியர்களின் இல்லங்களுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சென்னை தந்தி/ STR பகுதி சார்ந்த முன்னணி தோழர்/ தோழியர்கள் சென்னை CCA அலுவலகம் சென்று அங்கு வருவோர் வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட உதவி வருகின்றனர். வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டியவர்கள் பட்டியல் மாதாமாதம் வெளியிடப்படுகிறது. 

8) தற்போதுள்ள சம்பான் திட்டத்தில் அரியர்ஸ் வழங்கிட இயலவில்லை. ஆகவே, மேம்பட்ட சம்பான்.2 உருவாக்க வேண்டும்.

மேலும், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் உருவானபோது நிவாரண நிதியாக ரூ.14.72 லட்சம் திரட்டப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

வயநாடு வெள்ள நிதியாக  ரூ.20.01 லட்சம்  திரட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றி. 

குறிப்பு : 

சென்னை சொஸைட்டி பிரச்சனை குறித்து பேசியவுடன் நமது பொதுச் செயலாளர் தோழர் வரப்பிரசாத் அவர்கள், டெல்லியிலே உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தமிழ் மாநில சங்கத்திலிருந்து இது குறித்து அனைத்து விஷயங்களையும் அறிந்த ஒருவரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மாநில சங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அனைவருக்கும் நன்றி.

Sundarakrishnan, CS

 


No comments:

Post a Comment