Wednesday 9 May 2018

தோழர் ராமன் குட்டி அவர்களின் மனக் குமுறல்களுக்கு வடிகாலாக அவர் எழுதியுள்ள ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் . நம் AIBSNLPWA  சங்கத்தை தோற்றுவித்த வரலாறு, அது ஈன்றெடுத்த வெற்றிகள் அதன் காரணமாக அடைந்துள்ள மிகப்பெரிய வளர்ச்சி, இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரங்கள் , பெற வேண்டிய வெற்றிக்கனிகள் ஆகியவைகள் குறித்து அவர் எழுதியிருப்பது, காலம் நமக்களித்த கொடையாகும்.  வாருங்கள் இனி அவர் எழுத்துலகில் பயணிப்போம்.


சில நாட்களுக்கு முன் எனது பெயரைக் குறிப்பிடாமல் நான் ஓய்வெடுக்கலாம் என்று ஒரு சங்கம் அறிவுறுத்தியது . என்மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு நான் நான் இதில் பதிலுரைப்பதில்லை. ஆனால் நம் தோழர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால் நம் சங்கம் AIBSNLPWA   உருவாக்கிய பின்னணியினை இங்கே எடுத்தியம்ப விரும்புகிறேன்.
37 ஆண்டுகள் மத்திய அரசிலும் , 3 ஆண்டு 3 மாதங்கள் BSNL லும்  சேவை செய்த பின் சனவரி 2004 ல் ஒய்வு பெற்று திருவனந்தபுரத்தில் ஓய்வெடுத்து சில மலையாள பத்திரிகைகளுக்கும் , கேரளா மாநில BSNLEU  சங்க பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தேன்.
2006 ஆம் ஆண்டு அரசு ஆறாவது சம்பள கமிஷனை நியமித்தது. சம்பள கமிஷனுக்கும்  BSNL   ஓய்வூதியர்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என எண்ணினேன்.
2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் DPE பொதுத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு 50 சதவீத IDA  பஞ்சபடியை இணைக்க உத்தரவிட்டது. மே ,2008ல் DOT யும் பிறகு  சிறிது   காலத்திற்குப்பின் BSNL  நிர்வாகமும்  பஞ்சபடியை இணைக்க ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த 50 சதவீத  IDA   இணைப்பு   BSNL  ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படவில்லை. மிகவும் வருத்தம் கொடுக்கும் விஷயம் என்ன வென்றால் BSNL  பணியில் இருப்போர் சங்கம் ஒன்று கூட ஓய்வூதியர்களுக்கும் IDA  இணைப்பு வழங்க வேண்டுமென்று குரல் கொடுக்க வில்லை. அவர்கள் ஓய்வூதியர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
செப்டம்பர் 2008ல் ஆறாவது சம்பளக் கமிஷன்  பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு உத்தரவிட்டது. BSNL  ஓய்வூதியர்களும் CCS  ஓய்வூதிய விதிகள் 1972ன்  பிரகாரம் பெற்று வருகிறோம். 26-11-2008 ல் BSNL  அதிகாரிகளுக்கு இரண்டாவது PRC பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வுக்கு DPE உத்தரவிட்டது. எந்த சங்கமும் நம் ஓய்வூதிய மாற்றத்திற்கு குரல் கொடுக்காத சமயத்தில்தான் BSNL  ஓய்வூதியர்கள் எந்த விதமான நன்மையையும் அடைய முடியாது என்று நான் உணர்ந்தேன்  உடனே (1) சம்பளக்கமிஷன் மூலம் பெரும் நன்மைகள் , (2) PRC சிபாரிசின் மூலம் பெரும் நன்மைகள் என இரண்டு அட்டவணைகளை தயாரித்தேன். இரண்டையும் ஒப்பிட்டு விரிவான கடிதத்தை 23 மத்திய அரசு சங்கங்களுக்கும், மற்றும் ஓய்வூதியர் சங்கங்களுக்கும்  அனுப்பி வைத்தேன். கர்நாடகா P & T ஓய்வூதியர் சங்க தலைவர் தோழர் சதாசிவ ராவ் அவர்கள் மட்டும் பதிலளித்தார்.

CITU  தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் E .பாலாநந்தன் அவர்களுக்கு 4 கடிதங்கள் எழுதி அப்போதைய BSNLEU வின் பொதுச்செயலர் தோழர் V A N  நம்பூதிரி அவர்களை ஓய்வூதியர் case களை எடுக்க  ஏற்பாடு செய்ய வேண்டினேன். ஆனால் எந்த ஒரு பதிலும் வராத நிலையில் அந்த   முன்னாள் MP  யை திருவனந்தபுரத்தில் சந்தித்து ஓய்வூதியர் பிரச்சினைகளை எடுத்துச் சொன்னேன். அவரும் நான் கூரியவைகளை   தெளிவாக உணர்ந்து கொண்டார். நம்பூதிரியிடம் கூறி பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறினார் ,நம்பினேன் சிறிது காலம் ஓய்வெடுத்தேன் ஆனால் எதுவுமே நடக்க வில்லை.
தோழர் O.P. குப்தா அவர்கள் கண்ணூர் ( கேரளா) தன் மகனுடன் தங்கியிருந்தார். அவரிடம் தொலைபேசியில் பேசும் போது இதையே கூறினேன். அவர் CDA  சம்பள விகிதத்திற்கு மாறிவிடுங்கள் என்றார் ஆனால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு பிராகாரம் அவ்வாறு மாற இயலாது என்று அறிந்தேன்.
இனிமேலும் நாம் ஓய்வெடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை எதாவது செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தேன். ஆனால் தனி ஒருவனாக எதுவும் இந்த விஷயத்தில் செய்ய இயலாது. அப்போதுதான் மறைந்த தோழர் சித்து சிங் அவர்கள் BSNL  ஓய்வூதியர் அமைப்பினை NTR   மாநிலத்தில் ஆரம்பித்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 28 மார்ச் 2009 ல் புது டில்லி CTO   ஓய்வறையில் பல மாநிலங்களை சார்ந்த தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டது

என்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை :-

அப்போது நான் கேரளாவில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியர் சங்கத்தின் துணைப்பொது செயலாளராக இருந்தேன்.  நான் ஓய்வூதியர் ஒற்றுமையினை குலைப்பதாக அந்த கூட்டத்தில்   குற்றம்  சுமத்தப்பட்டது . நான் அந்த புதுடில்லி கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று தீர்மானம் இயற்றினார்கள். நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன். தோழர்கள் DG மற்றும் சித்து சிங் அவர்கள் நான் கூட்டத்திற்கு வரவேண்டாம் என்றும் தாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகக் கூறினார்கள். அந்த கூட்டத்திற்கு 10 மாநிலங்களிலிருந்து தலைவர்கள் வந்து பங்கு கொண்டார்கள். தோழர்கள் DG , சித்து சிங் ,ஹரியானாவிலிருந்து தஹியா, ஒரிஸ்ஸாவிலிருந்து துபால் , தமிழ்நாட்டிலிருந்து ராமராவ் இன்னும் பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் BSNL ஓய்வூதியர் நலங்காக்க அனைத்திந்திய அளவில் ஒரு சங்க அமைப்பு தேவை என்பதை ஒருமனதாக தீர்மானித்தார்கள்   அதன்படி 2009 ஆகஸ்டு மாதம் 29 அன்று சென்னை தாம்பரத்தில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது . கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நம் தலைவர்களை அழைத்திருந்தேன் இதற்கிடையில் கேரளா மத்திய அரசு ஓய்வூதியர் சங்கத்திலிருந்து விலகினேன்.
அறிமுக மாநாடு

தோழர்கள் முத்தியாலு, DG ,ராமராவ் ,நடராசன் , ஹரிகிருஷ்ணன் , மோகன்ராஜ் ,கௌஸ் பாட்சா இன்னும் பலர் கடுமையாக இம்மாநாட்டிற்காக உழைத்தனர். எனது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக 15 மாநிலங்களிலிருந்து சுமார் 460 தோழர்களுக்கு மேல் தங்கள் சொந்த செலவில் வந்திருந்தனர். மிக நீண்ட தூரமான அஸ்ஸாம் போன்ற மாநிலத்திலிருந்தும் ,கங்காதரராவ் மறைந்த வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட மிக நல்ல டீம் கள் மாநாட்டில் கலந்து கொண்டன. அமைப்பு விதி முறைகளை நான் வரைந்தேன். என்னை பொதுசசெயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். நான் என் ஓய்வினை மூட்டை கட்டி வைத்தேன்.
காலிப்பையுடன் சங்கம் துவக்கப்பட்டது. கர்நாடகா ரூ 10,000/- த்தினை கோட்ட முன்பணமாகக் கொடுத்து உதவினார்கள் . தோழர்கள் சித்து சிங் NTR  சார்பாகவும் ,படா நாயர் கேரளா சார்பாகவும் தலா 5000/- மற்றும் சார்பாளர்கள் ரூ 2600/- கொடுத்தார்கள். மாநாட்டின் முடிவில் வரவேற்பு குழு மீதமிருந்த ரூ 39197/- கொடுத்தார்கள் அந்த தொகை புதிதாக உதயமாகியுள்ள நம் அமைப்பிற்கு வழங்கப்பட்டு ஒரு நெடும் பயணம் துவக்கப்பட்டது. BSNL   ஓய்வூதிய மாற்றம் என்பதுவே முக்கிய குறிக்கோளாக அப்போது இருந்தது.

பொதுச்செயலாளராக எனது பணியினை முதல் நாளன்றே துவக்கிவிட்டேன். BSNLEU, NFTE, NUBSNLW , SNEA  ஆகிய பணியாளர் சங்கங்களுக்கு ஒத்துழைப்பு கோரி கடிதங்கள் எழுதினேன். அதில் நான் " எங்கள் விருப்பம் தனியாக அல்ல அனைத்து பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒத்துழைப்புடனும், உதவியுடனும் பயணிப்பது என்பதே.  நாங்கள் நிச்சயம் ஓய்வூதியர் நலன்களை    உங்கள் உதவியுடனும் , ஒத்துழைப்புடனும் நிறைவேற்ற பாடு படுவோம்" என்று குறிப்பிட்டிருந்தேன்.
தோழர் நம்பூதிரி உடனடியாக BSNL  ஓய்வூதியர்களுக்காக ஒரு தனி சங்கம் உருவாக்கப்பட வேண்டும் அதற்கு உடனடியாக புதுடில்லியில் ஒரு மாநாடு கூட்டப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
அந்த மாநாடு கூடுவதற்கு முன்னால் ஒற்றுமை காக்க வேண்டி அவருக்கு கடிதம் எழுதினேன்." எந்த வித தயக்கமும் இன்றி அனைத்து BSNL   ஓய்வூதியர்களும் AIBSNLPWA வில் இணைந்து பலப்படுத்த வேண்டும். தயவு செய்து யோசியுங்கள்  பழுத்த தொழிற்சங்க வாதியான நீங்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன். நம் ஒற்றுமைக்காக நான் எந்த விதமான விவாதத்திற்கும், சீரமைவிற்கும் , தகுந்த இடமளிக்கவும் தயாராக உள்ளேன்.( முழு கடிதமும் நம் முதல் இதழில் வெளியாகி உள்ளது )

"BSNL  ஓய்வூதியர் குரல் " எனும் நம் சங்க இதழை வெளியிட்டோம்.முதல் பிரதியை தோழர் முத்தியாலு 2010 மே முதல் நாளில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார். 35 இதழ்களை இடை நிறுத்தம் இல்லாமல் வெளியிட்டேன் அதுவே பிறகு "பென்ஷனர் பத்ரிக்கா " என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது .
மூளைக்கு ஓய்வில்லை :

நான்  21 மே 2010 மிக பயங்கரமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன். சில மாதங்களுக்கு என்னால் பேசவோ,நடக்கவோ இயலாத சுழ்நிலை. அந்த சமயங்களில் தோழர்கள் DG ,முத்தியாலு ,கங்காதர ராவ் , சித்து சிங் ஆகியோர் இயக்கத்தை நல்ல படி நடத்தி சென்றனர்.
" உங்கள் உடலில் எதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒய்வு அளிக்க வேண்டும். ஆனால் மூளை பாதிப்படைந்திருந்தால் மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும். ஆகவே மூளைக்கு கூட்டல் கழித்தல் ,வகுத்தல் , டைப் செய்தல் என ஏதாவது மூளை சம்பந்தமாக வேலை செய்து கொண்டே இருங்கள்என்று டாக்டர்கள் கூறினார்கள் 
அவ்வளவுதான் உடனே நிறைய பணி புரிய துவங்கினேன் . வெளியூர்களுக்கு மனைவியின் துணையுடன் சென்று வந்தேன். மிகக்குறுகிய காலத்தில் 19 மாநிலங்களில் 180 மாவட்டங்களில் நம் சங்க கிளைகள் துவக்கப்பட்டன . நம் தோழர்களின் உற்சாக வெள்ளத்தைக்கண்ட பின் நான் ஒய்வு என்பதையே மறந்தேன். ராஜஸ்தானத்தை சேர்ந்த தோழர் R.A. சர்மா மற்ற தோழர்கள் ஒன்று கூடி முதல் அனைத்திந்திய மாநாட்டினை 2012 அக்டோபர் மாதம் ஜெய்ப்பூரில் நடத்தினார்கள் அங்கே நான் செயலாளர் பதவியிலிருந்து விலகி தலைவர் ஆனேன்
நாம் ஓய்வில் இருந்த சமயம் யாருமே BSNL  ஓய்வூதியர்கள் குறித்து அக்கறை கொள்ளவே இல்லை. ஆனால் 20-08-2009ல் நம் சங்கம் ஆரம்பித்த பின் எல்லோருமே நம்மை குறித்து பேசுவதுவே நம் சங்கம் அடைந்த மிகப்பெரிய பெருமையாகும்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வூதிய மாற்றம் என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் நாம் அதனை மாற்றி அமைத்தோம். ஆம் 2011ல் நாம் ஓய்வூதிய மாற்றத்தை பெற்றோம். BSNL  எனும் ஒரே பொதுத்துறை நிறுவனம்தான் ஓய்வூதிய மாற்றத்தினை பெற்றது  168 பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொருவிதமான ஓய்வூதிய முறையினைக் கொண்டுள்ளன. நாம்தான் 68.8 சத IDA  விலிருந்து 78.2 சத IDA  மாற்றம் பெற்றோம். மேலும் 60:40 எனும் விதியை இல்லாது செய்தோம். ஆம்  நம் ஓய்வூதியம் முழுக்க முழுக்க மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் கிடையாது , BSNL   க்கு மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 78.2 கோரிக்கையுடன் 60:40 விதி தகர்த்தலை இணைக்க வேண்டாம் அதை தனியாக பார்த்துக்கொள்ளலாம் எனறவர்கள் நாம் இரண்டையும் ஒரே சமயத்தில் வென்றெடுத்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள்தான் சாதித்ததாக பறை சாற்றுகிறார்கள். இதை நான் முன்பே எதிர் பார்த்தபடியால் எனக்கு ஆச்சர்யமாக இல்லை.
நாம் பெற்ற வெற்றிகளை சரித்திரமே நிரூபித்து காட்டிவிட்டது எனவே நான் அவைகளை மீண்டும் மீண்டும் எடுத்துக்கூற விரும்பவில்லை

இப்போது சில முக்கிய குறிக்கோள்கள் நம்முன் உள்ளன. நாம் மத்திய அரசால் நேரடியாக ஓய்வூதியம் வழங்க பெற்றுக்கொண்டு வருகிறோம். எனவே நாம் மத்திய அரசின் ஓய்வூதியர்கள். நம் ஓய்வூதியம் CCS பென்ஷன் விதி 1972 மூலம் FIX   செய்து வழங்கப்படுகிறது இந்த  விதி படி தான் மத்திய அரசின் ஓய்வூதியர்கள் சுமார் 50 லட்சம் பேர்களுக்கு வழங்கப்படுகிறது.   ஆகவே நாம் ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைத்த பரிந்துரைப்படி நம்முடைய ஓய்வூதியத்தினை IDA  முறையில் மாற்றி அமைத்திட வேண்டுகிறோம்.
CDA  ஓய்வூதியர்களுக்கு ---- அடிப்படை ஓய்வூதியம் + 01-01-2016 CDA  + 32 சத அடிப்படை ஓய்வூதியம் fitment.
BSNL IDA  ஓய்வூதியர்களுக்கு --- அடிப்படை ஓய்வூதியம் + 1-1-2017 IDA + 32 சத அடிப்படை ஓய்வூதியம் fitment.

CCSபென்ஷன் விதி 1972 ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அவைகளை BSNL IDA   ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்  பட  வேண்டும் . அதற்காக நாம்  CDA ஊதிய விகிதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை, மேலும் அவ்வாறு மாறவும் இயலாது. ஒரு குறிப்பிட்ட கால இடை வெளிகளில் BSNL  ல் ஓய்வூதிய மாற்றங்கள் செய்வதற்கு அரசியல் ரீதியாக அல்லது கொள்கை அடிப்படையில் அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் இதனை நிறைவேற்றும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளோம். அதை ஈன்றெடுக்கும் வரையில் ஓய்வென்பது கிடையாது.
மூன்றாவது PRC பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என சில தலைவர்கள் கோருகிறார்கள் மூன்றாவது PRC  ஓய்வூதிய மாற்றங்கள் ஏதும்  பரிந்துரைக்கவில்லை . அவ்வாறு PRC   பரிந்துரையின் பிரகாரம் ஓய்வூதிய மாற்றம் கேட்டால், PRC ஓய்வூதிய மாற்றங்களை எதுவும் சிபாரிசு செய்யவில்லை என்று அரசு கூறி மறுத்து விடலாம். இது அரசிற்கு மிகவும் சுலபமான காரியம். அந்த தலைவர்கள் ஓய்வூதியர்களுக்கு அல்ல அரசுக்கு சாதகமாக காய்களை நகர்த்துகிறார்கள் . அப்படிப்பட்ட தலைவர்களை நம்பி நாம் ஓய்வெடுக்க முடியுமா ? அந்த அளவிற்கு முட்டாள்கள் அல்ல நாம்.
ஓய்வூதியர்கள் நாம் தான் ஓரணியில் நின்று போராட வேண்டும்.மற்றவர்கள் எவரையும் நம்பி பயனில்லைஇதை நாம் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டு விட்டோம். எது வரினும் நான் நில்லேன் என் கடமையை அயராது செய்வேன். நான் சங்கத்தில் எப்பொழுதும் எதாவது பதவியில் தொடர வேண்டுமென்பதில்லை. AIBSNLPWA  வில் தலைமைக்கு பஞ்சமில்லை . என் இறுதி மூச்சு உள்ளவரை சங்கத்திற்காக உழைக்கவே விரும்புகிறேன். என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தியவர்களுக்கு நன்றி .
ஒரு முறை கௌதம புத்தர் அவர்களை கடும் சொற்களால் ஒருவர் நிந்தித்த போது புத்தர் கூறினார் " மகனே நீ உதிர்த்த வார்த்தைகளை பரிசாக எண்ணி அவைகளை ஏற்க மறுக்கிறேன். எப்போது நான் மறுத்து விட்டேனோ அவைகள் அந்த வார்த்தைகளை பிரயோகித்தவரையே போய் சேரும்."  எனக்கு அறிவு புகட்ட நினைப்பவர்களுக்கு நான் சொல்வேன் "  ஓய்வெடுக்கும் படி என்னை அறிவுறுத்தும் நண்பர்களே இதே அறிவுரைகளை உங்கள் வயதான மூத்த தலைவர்களிடம் போய் கூறுங்கள்.  வெகு விரைவாக அவர்களிடம் இவ்வாறு கூறுவது மிகவும் நன்மை பயக்கும்."












































No comments:

Post a Comment