Tuesday, 29 May 2018

பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களின்  பொறுப்புகளில் இருக்கும்  நம் மாநிலத் தலைவர் தோழர் வி இராமாராவ் அவர்கள் சென்னை மெட்ரோவில் பயண டிக்கெட் விலை மிக அதிகமாக உள்ளது.  விலையினைக் குறைத்தால் ஏழைகள் பயனடைவர் என்று ஆணித்தரமாக தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி உள்ளார். இதற்காக கையெழுத்து இயக்கமும் துவக்கி விலை குறைப்புக்கு அயராது பாடு பட்டு வருகிறார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி 29-5-18 அன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் பதிப்புதான் இது.

பணக்காரர்களுக்கு மட்டுமானதா சென்னை மெட்ரோ?- வி.ராமாராவ் நேர்காணல்
Published :  29 May 2018  07:13 IST
சென்னை மெட்ரோ ரயில்கள் 2016-ல் முதல் முறையாக இயங்கத் தொடங்கியபோது அதிகபட்ச கட்டணம் ரூ.40. அதுவே பலருக்கு அப்போது அதிர்ச்சியைக் கொடுத்தது. சென்னையைவிட பணக்கார நகரமாகக் கருதப்படும் பெங்களூருவிலேயே இதைவிட குறைவான கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதை அப்போதே பலரும் சுட்டிக்காட்டினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சென்னை மெட்ரோ ரயில் பயணிக்கும் தூரம் விரிவடைந்திருக்கிறது. ஆனால், கட்டண விஷயத்தில் அதிர்ச்சி தொடர்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கான கட்டணம் ரூ.70. மெட்ரோ ரயிலில் பயணிப்பதில் மக்களுக்கு உள்ள ஆர்வம் ஆரம்ப நாட்கள் கட்டணமில்லா அனுமதியின்போது வெளிப்பட்டது. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் பயணித்தார்கள். ஏன் குறைவான கட்டணத்தில் அதிகமானோரைக் கையாண்டு லாபம் ஈட்டும் உத்தியைக் கையாளக் கூடாது மெட்ரோ? இதுவும் இன்னமுமாக நிறையப் பேசுகிறார் வி.ராமாராவ். சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு மையம் என்ற பயணியர் நலன்சார் அமைப்பின் இயக்குநர்.
இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் பயணத்துக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது சென்னையில்தான். இது எந்த அளவு சரியானது?
சென்னையில் குறைந்தபட்சக் கட்டணம் முதல் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு ரூ.10. டெல்லியிலும் முதல் இரண்டு கி.மீக்கு ரூ.10. கொல்கத்தாவில் முதல் ஐந்து கி.மீக்கு ரூ.5 தான். கொல்கத்தாவில் அதிகபட்சக் கட்டணம் ரூ.25. இந்தக் கட்டணத்தில் 25-30 கி.மீ தூரம் பயணிக்க முடியும். டெல்லியில் அதிகபட்சக் கட்டணம் ரூ.60. அதுவும் 32 கி.மீக்கு மேல் போனால்தான் இந்தக் கட்டணம். சென்னையில் 20 கி.மீக்கு கட்டணம் ரூ.60 அதற்கு மேல் போனால் ரூ.70/-. தினமும் பயணிப்பவர்கள் ஸ்மார்ட் கார்டு வாங்கிக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும் 10%, 20% சலுகைகளும் ஒட்டுமொத்த கட்டணச் செலவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
மக்கள் வரிப் பணத்தில் அரசால் உருவாக்கப்படும் ஒரு பொதுப் போக்குவரத்துத் திட்டத்துக்கு இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையிலும் சரியானதல்ல. டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சட்டப்படியே இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பிறகு, மக்கள் கருத்தையும் கேட்ட பிறகு அந்தக் குழுதான் கட்டணத்தை நிர்ணயிக்கும். இங்கு அதுபோன்ற எந்த ஏற்பாடும் இல்லை. அதிகாரிகளே கட்டணத்தை நிர்ணயித்துவிடுகிறார்கள். கட்டண விவகாரத்தில் எங்களைப் போன்ற பயணியர் அமைப்புகளின் குரல் கேட்கப்படுவதே இல்லை. 2016-ல் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கும் முன், எங்கள் அமைப்பு உட்பட சில அமைப்புகள், குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை வைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலும் கட்டணம் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. டெல்லி, கொல்கத்தா, மற்ற நகரங்களின் அளவுக்கே இங்கும் கட்டணம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
மெட்ரோ ரயில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திருக்கிறதா?
நான்கு பேர் கொண்ட குடும்பம் மெட்ரோ ரயிலில் மீனம்பாக்கத்திலிருந்து சென்ட்ரலுக்கு செல்ல ரூ.300 வரை செலவாகிவிடும். அவர்கள் கால் டாக்ஸிகளில் சென்றாலும் கிட்டத்தட்ட அதே கட்டணம்தான் ஆகும். அதுவும் வீட்டு வாசலிலிருந்து எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கே சென்றுவிடலாம். பிறகு, போக்குவரத்து நெரிசல் எப்படிக் குறையும்.? மெட்ரோ ரயில் கட்டணம் குறையாதவரை அதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
மெட்ரோ ரயில் திட்டத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை சமாளிக்க இந்தக் கட்டணம் இன்றியமையாதது என்று நிர்வாகம் சொல்கிறதே?
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு 27 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கொல்கத்தாவில் 6.3 லட்சம் பேர். சென்னையில் தினமும் மூன்று லட்சம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 33,000 பேர்தான் பயணிக்கிறார்கள். அதிகக் கட்டணம் வசூலிப்பதைவிட கட்டணத்தைக் குறைத்து அதிக மக்களை ஈர்ப்பதன் மூலமாகவும் செலவுகளைச் சமாளிக்கலாம். ஆனால், அதற்கு 3-4 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டணத்தை உயர்த்தலாம். அதுவரை நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது நஷ்டம் அல்ல. முதலீட்டின் ஒரு பகுதிதான்.
இந்த உத்தி எடுபடுமா?
ஏன் எடுபடாது? புறநகரங்களிலிருந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 1.5 லட்சம் பேர் வருகிறார்கள். இதில் பாதிப் பேராவது மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால், ரூ.5, ரூ.10 கொடுத்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் ரூ.50, ரூ.70 செலவழித்து இதற்கு வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கட்டணம் குறைந்தால் பயணிகள் அதிகரிப்பர். கொல்கத்தாவில் ஐந்து ரூபாய்க்கு மெட்ரோ ரயில் ஓடுகிறதே, எப்படி ஓடுகிறது?
கட்டணம் தவிர வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன?
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பிரமாதமாக இருக்கின்றன. சாய்வுப்படிக்கட்டுகள் (ரேம்ப்) வைத்திருப்பது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஆனால் சில ரயில் நிலையங்களுக்குச் சென்றுசேர்வதே பிரச்சினையாக இருக்கிறது. உதாரணமாக, நங்கநல்லூர் சாலை ரயில் நிலையத்துக்கு நங்கநல்லூரிலிருந்து வருபவர்கள் சாலையில் ரயில் நிலையத்தின் எதிர்ப்புறம் இறங்கி சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆலந்தூர் போன்ற ரயில் நிலையங்களில் பாதசாரிகளிக்கான உயர் பாலங்கள் (foot overbridge) உள்ளன. எல்லா இடங்களிலும் அனைத்து நிலையங்களுக்கும் இதுபோன்ற வசதிகள் செய்துதரப்பட வேண்டும். தமிழக அரசால் இயக்கப்படும் சிறு பேருந்துகள் பிரதான சாலைகளையே தொடுகின்றன. காலனிகள், தெருக்கள் வழியாகச் செல்வதில்லை. உட்புறச் சாலைகளைத் தொடும் பேருந்துகளை இயக்குங்கள் என்று சென்னைப் போக்குவரத்து கழகத்திடம் சொல்லியாகிவிட்டது. அவர்கள் அதைக் கவனிப்பதாகவே தெரியவில்லை.
நன்றி : தமிழ் இந்து / 29-5-18

No comments:

Post a Comment