Tuesday 17 September 2024

 

தீர்மானம் 1

பென்ஷன் மாற்றம் குறித்து....

கடந்த ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் பெற்றிட சிரத்தையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட  தலைமையை இச்செயற்குழு  பாராட்டுகிறது.

அகில இந்திய தலைமையின் அறைகூவலை ஏற்று தாராளமாக வழக்கு நிதி வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. வேறு எந்த அமைப்பும் இந்த மாதிரியான தாராளமான எதிர் வினையை தனது உறுப்பினர்களிடம் இருந்து  கனவில் கூட பெற்று இருக்காது என்பது திண்ணம்.

7வது ஊதியக் குழுவின் நிர்ணயப் பலன் பரிந்துரையின் அடிப்படையில் பென்ஷன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசியல் ரீதியான முயற்சியையும் நமது அகில இந்திய சங்கம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம்.2

 

செப்டம்பர், 2013ல், மத்திய அரசு 7வது ஊதியக் குழுவை அமைத்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.A.K.மாத்தூர் அவர்கள் தலைமையில் ஊதியக் குழுவை அமைத்து 28/2/2014 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை  19/11/2015 அன்று மத்திய அரசிடம் வழங்கியது. ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று  4/8/2016 அன்று மத்திய அரசு உத்தரவை வெளியிட்டது. அந்த பரிந்துரைகள் 1/1/2016 முதல் அமலானது.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைப்பது என்பது 1986 முதல் நடைமுறையாக உள்ளது. இப்போது 8வது ஊதியக்குழுவை அமைத்தால்தான் 1/1/2026 முதல் அதன் பரிந்துரைகளை

 அமலாக்கும் வகையில் அந்த ஊதிய குழு செயலாற்ற முடியும்.

 BSNLஇணைந்த DOT ஊழியர்கள், மத்திய அரசின் பொது நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறுகிறார்கள். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையான ஓய்வூதிய பலன்களையும் பெறுகிறார்கள்.CCS Pension Rules, 2021 ( old 1972) அடிப்படையில் தான் அவர்களும் ஓய்வூதியம் பெறுவார்கள்.ஆகவே, 8வது ஊதியக் குழுவின் ஆய்வு வரையறைகளில் (Terms of Reference) BSNL+ DOT  combined service pensionersகளையும் Eligibility Listல் சேர்த்து அவர்களின் பென்ஷன் மாற்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

கம்யூடேஷன் தொகையை பிடிக்கும் காலத்தை குறைப்பது குறித்து.....

நீதிபதி திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமையிலான 5வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1/1/1996 முதல் 15 ஆண்டுகள் கழித்து கம்யூடேஷன் தொகை பிடித்தம் நிறுத்தப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி, தற்போதைய அரசு ஓய்வூதியர்களின் சராசரி வாழ்நாள் காலம் 77 ஆண்டுகளாக  நிர்ணிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி A.V.ரெட்டி அவர்கள் தலைமையிலான நீதிபதிகளுக்கான இரண்டாவது ஊதிய கமிட்டி 12 ஆண்டுகள் கழித்து கம்யூடேஷன் தொகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்துள்ளன.

உதாரணத்திற்கு,

PPF வட்டி விகிதம்,

1/1/2006ல்,10.8%,

1/1/2016ல் 8.1%,

1/1/2022ல் 7.1%

 

 SCSS வட்டி விகிதம்.

1/1/2006ல் 9.2%,

1/1/2016ல் 8.6%,

1/1/2022ல் 7.4%

 

NSC வட்டி விகிதம்

1/1/2006ல் 11.5%

1/1/2016ல் 8.1%

1/1/2022ல் 6.8%

 

எட்டு சத வட்டி விகித  அடிப்படையில் நமது கம்யூடேஷன் தொகை  பிடித்தம் 11 ஆண்டுகளிலேயே முடிந்து விடுகிறது.

கேரளா, ஒரிசா ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசு ஊழியர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து கம்யூடேஷன் தொகை பிடித்தம் நிறுத்தப்படுகிறது. குஜராத்தில் அது 13 ஆண்டுகளாக உள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், 128 மாதங்களுக்குப் பிறகு பிடித்தத்தை செய்ய வேண்டாம் என்று  உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் அடிப்படையில் பஞ்சாப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே,  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூடேஷன் தொகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும்,128 மாதங்களுக்கு மேல் பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தரவும் தேவையான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இது குறித்த விவரங்களை மாநில செயலாளர்கள் சேகரித்து பொதுச் செயலருக்கு 31/12/2024க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறது.

 வழக்கறிஞர்களை அணுகி பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் டெல்லி முதன்மை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்பது  குறித்து ஆராய  டெல்லி அல்லது அதன்  அருகாமையிலிருந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றக்கூடிய இரண்டு தோழர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும். அவர்கள் வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பணியாற்ற வேண்டும்.

தீர்மானம் 4 :

Notional Increment குறித்து...

பணி ஓய்வு பெறும் நாளில் ஒரு வருடம் முழுமையான பணி நிறைவு செய்திருந்தால், அவர்களுக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு தொகையை வழங்கி அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவருடைய ஓய்வூதியம் மறு  நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பிறகு இந்த நடைமுறை சட்டபூர்வமானதாக கருதப்பட வேண்டும். ஆனாலும்,  மத்திய அரசின் சில துறைகள் இதுகுறித்து மாறுபட்ட உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. பென்ஷன் இலாகா இது பற்றிய ஒரு முறையான உத்தரவை வெளியிடவில்லை. நமது அகில இந்திய சங்கம், தொலைத் தொடர்பு துறை செயலருக்கு இதை விளக்கி 17/1/24 அன்றும் 8/7/24 அன்றும் இரண்டு கடிதங்களை எழுதி உள்ளன.பதில் ஏதும் இல்லை.

 பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஓய்வூதியரும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை வழக்குக்காக மன உளைச்சலுடன் செலவிடுவது தவிர்க்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக Notional Increment குறித்து பொதுவான, தெளிவான உத்தரவை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 :

பென்ஷன் காலதாமதமாக பட்டுவாடா ஆவது பற்றி..

சம்பான் அடிப்படையில் தொலை தொடர்பு துறையே நேரடியாக நமக்கு பென்ஷன் பட்டுவாடா செய்யாமல் வங்கி/அஞ்சலகம்  பட்டுவாடா செய்து வந்தபோது மார்ச் மாதம் நீங்கலாக மற்று மாதங்களில் அந்த மாதத்தின் கடைசி நாளிலோ அதற்கு முன்பாகவோ பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.

கடந்த மூன்று மாதங்களாக அது நடைபெறாமல் கடும் கால தாமதம் ஆகிறது.  சில மாநிலங்களில்  அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை கூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.  ஓய்வூயர்களுக்கு இது தேவையற்ற மன உளைச்சலை உருவாக்குகிறது.

சில வங்கிகள் காலதாமதமாக பட்டுவாடா செய்கிறது. சில வங்கிகளில் ஒரு சிலருக்கு உடனடியாகவும்  மற்றவர்களுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு என்று பொதுவாக விளக்கமளிக்கப்பட்டாலும் எதனால் இந்த காலதாமதம் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகவும் முன்னேற்றம் அடைந்த இந்த டிஜிட்டல் உலகத்தில் சில மணித் துளிகளில் பணத்தை பரிமாற முடிகிறது. ஆகவே, தற்போது உள்ள சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து அனைத்து பென்ஷனர்களும் கடைசி நாளன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் பென்ஷன் பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். கண்ட்ரோலர் ஆஃப் கம்யூனிகேஷன் அக்கவுண்ட்ஸ், டெல்லி  இது குறித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். பென்ஷன் இலாகா இது குறித்து மேற்பார்வை செய்திட வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6 :

நமது AIBSNLPWA அமைப்பை விரிவாக்கிட.....

தொலைத் தொடர்பு துறையில் நமது AIBSNLPWA அமைப்புதான் மிகப் பெரிய அமைப்பு. நமது ஆயுள் சந்தா உறுப்பினர்கள் எண்ணிக்கை 77,000த்தை தாண்டி விட்டது. இதற்காக உழைத்த அனைத்து மட்டத்தில் உள்ள கேடர்களுக்கும் தலைவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். நமது சங்கத்தின் நிதி நிலையும் வலுவாக உள்ளது. இதற்கான காரணங்கள் :  வானவில் போன்று அனைத்து கருத்தோட்டம் உள்ளவர்களையும் உள்ளடக்கி செயலாற்றுவது,  நிதியை கையாள்வதில் கறார்தன்மை, ஜனநாயக ரீதியான, வெளிப்படையான செயல்பாடு மற்றும் அனைத்து தனிநபர் பிரச்சினைகளையும் பரிவோடு தீர்ப்பது போன்றவை ஆகும். நமது அமைப்பு, சமூக  அக்கறையோடு செயலாற்றுகின்றது.

 நமது அகில இந்திய சங்கமும்,  மாநில சங்கங்களும், நாட்டின் பல பகுதியில்  இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு  உதவ நிதி கேட்டு அறைகூவல்கள் விடுக்கும் போதெல்லாம் நமது உறுப்பினர்கள் தாராளமாக நிதி வழங்கி நமது அமைப்புக்கு பெருமை சேர்க்கின்றனர். சமீபத்திய உதாரணம்,  கேரளா முதலமைச்சர் வயநாடு வெள்ள நிவாரண நிதிக்கு குறுகிய காலத்தில் நமது உறுப்பினர்கள் 50  லட்சம் வழங்கியதாகும்.

தற்போது, மூன்று மாநிலங்களில் ஐந்து இலக்க உறுப்பினர் எண்ணிக்கை உள்ளது. அனைத்தும் தென்னிந்திய மாநிலங்கள். வழக்கம்போல,  தமிழ்நாடு மாநிலம் முதன்மை மாநிலமாக உள்ளது. மேற்கே குஜராத், மகாராஷ்டிரா, வடக்கே, உத்திரப்பிரதேசம் (மேற்கு)  மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் புதிய மாநில சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தேக்க நிலை உள்ளது.

நமது அமைப்பு விதிகளின்படி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நேரடியாகவும் மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தி கேரளா மாநில சங்கம் அனைவருக்கும் வழிகாட்டுகிறது.நமது சங்கத்தின் முக்கிய நடைமுறை,  நிதி விஷயத்தில் கறார்தன்மையோடு செயல்படுவதாகும். கேரள மாநில சங்கம் அதன் மாவட்ட சங்கங்களின் நிதி விவரங்களை சரியாக மேற்பார்வை செய்கிறது. தலமட்ட உறுப்பினர்களை நமது அமைப்பின்  செயல்பாட்டில் ஈடுபாடு கொள்ளும் வகையில் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. தளத்தை விரிவு படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அனைத்து மாவட்ட சங்கங்களும் தங்களுக்கான குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து, அடுத்த அகில இந்திய மாநாட்டிற்குள் அந்த இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று  என்று இச்செயற்குழு அறைகூவல் விடுக்கின்றது.


No comments:

Post a Comment